இலுப்பக்குடி ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
காரைக்குடி, செப்.17- காரைக்குடி அருகே ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு பங்கேற்றார். கும்பாபிஷேகம் முடிந்து வரும் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த பெண் ஒருவரை தனது பாதுகாவலர்கள் வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார் அமைச்சர். காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியில் புகழ்பெற்ற நகரத்தார் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்றான, ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் எனும் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில்கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, தனபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. புண்ணிய தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைத்து, வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாராயணங்கள் முழங்க சிறப்பு வேள்விகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக இன்று காலை யாகசாலையில் இருந்து புனித கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித கடத்தை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று விமான நிலையை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்தியங்கள் இசைக்கவும், ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் மற்றும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சன்னதிகளின் விமானக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், “ஹர ஹர மகாதேவா”, “தென்னாடுடைய சிவனே போற்றி” என பக்தி முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சுயம்பிரகாஸ்வரர் மற்றும் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் நாட்டார்,மற்றும் நகரத்தார் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பின்பு அமைச்சர் காரைக்குடி நோக்கி வரும்பொழுது கூட்டம் நெரிசலில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவரை தனது பாதுகாவலர் வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார்.