காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் வாசலில் தி.மு.க., - அ.தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் தர்ணா
காரைக்குடி, ஜூலை 30- காரைக்குடி மாநகராட்சியில், திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பெண் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வார்டுகளில் சாலை அமைத்தல், குப்பை அகற்றுதல், தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், "புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அதிகாரிகள் கூறுவதாகவும் பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு பெண் மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து,ஆணையாளர் பாலு பேச்சு வார்த்தைக்கு பின்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.