கோர்ட் வளாகத்திற்குள் போதையில் கார் ஓட்டி அமளி
காரைக்குடியை சேர்ந்த சுரேஷ் மற்றும் கல்லல் பகுதியைச் சேர்ந்த 'புறா' மணி ஆகிய இருவர் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்கான 'ரீகால்' (Recall) மனுத் தாக்கல் செய்வதற்காக, இருவரும் இன்று காரைக்குடி நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கின் ரீகால் நடவடிக்கைகள் நடைபெற தாமதமானதால், இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நேரம் செல்லச் செல்ல போதை தலைக்கேறிய இருவரும், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களுடைய நான்கு சக்கர வாகனத்தில் ஏறி இயக்கியுள்ளனர். அப்போது, போதை மயக்கத்தில் காரை அங்குமிங்கும் அதிவேகமாக ஓட்டியதில், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது கார் மோதியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்களும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினரும் உடனடியாகச் செயல்பட்டு, காரை மறித்து அதன் சாவியைப் பறித்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போதையில் காரை இயக்கி அச்சுறுத்தல் ஏற்படுத்திய சுரேஷ் மற்றும் 'புறா' மணி ஆகிய இருவரையும் பிடித்த காவல் துறையினர், அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.